நீட்-யுஜி 2026 வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் தீவிரமடைந்த போராட்டங்களுக்கு நடுவே, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (ஜூலை 25) தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரதமர் மோடிக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்தில், மாணவர்களின் நலனுக்காகவே இந்த முடிவை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
“தேசத்தின் இளைஞர்கள் குழப்பத்தின் வலையில் சிக்கிக்கொள்ளக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளேன்” என அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கல்வி, ஆசிரியர்கள் மற்றும் கல்வி சீர்திருத்தத்துடன் தான் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தொடர்புடையவனாக இருந்ததாகவும், வலிமையான, அனைவரையும் உள்ளடக்கிய கல்வி முறையே ஒரு வலிமையான தேசத்தின் அடித்தளம் என தான் எப்போதும் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜூலை 16-ல் வெளியிடப்பட்ட நீட்-யுஜி முடிவுகள் திருப்திகரமாக இருந்ததாகவும், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பின்னணியிலிருந்து வந்த பல திறமையான மாணவர்களும் வெற்றி பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனாலும், இந்த காலகட்டத்தில் பொறுப்பான பதவிகளில் இருக்கும் சிலர் தடைகளை உருவாக்கி மாணவர்களை தவறாக வழிநடத்த முயன்றது தன்னை மிகவும் வருத்தப்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
போராட்டங்களை தேசவிரோத சக்திகள் தவறாக பயன்படுத்தக் கூடாது என்றும், மாணவர்கள் தங்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதே நேரத்தில், வினாத்தாள் கசிவை தடுக்க கடுமையான புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்றும், தனி விரைவு நீதிமன்றங்கள் மற்றும் சிறப்பு புலனாய்வுக் குழு (STF) அமைக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.













